நதிக்கு ஓடும் வழி ஒன்றே ஒன்றுதான், அதுவே மானிட வாழ்க்கைக்கு வழிகளே இல்லை, நினைத்த வழியில் மானிட வாழ்க்கை செல்ல முடிவதே இல்லை, தான் விரும்பிய பாதையில் சென்று, வென்ற மனிதனுக்கும் பாதைகள் மாறிவிடுகின்றன, அதனை மாற்றும் காலச்சூழல் எது? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு எஸ்.ரா வின் துணையெழுத்து என்ற நூல், கதையின் வாயிலாக நம்மை உரசிப் பார்க்கின்றது, மனித வாழ்வை எடுத்துக்காட்டுகின்றது என்பதை செந்தமிழ்த்தேனீ யின் பார்வை சொல்கின்றது.
பொருளடக்கம்
சேவல்கட்டு வெற்றியும் வாழ்வின் தோல்வியும்
சேவல்கட்டு வீரனான செல்லையாவின் வாழ்வு இறுதியில் உணவகத்தில் சாம்பார் ஊற்றுபவனாக மாறும் வாழ்வின் சூழல். சேவல் கட்டின் நுட்பங்கள் சேவல் கட்டில் செல்லையாவின் வீரம், தோற்பது சேவலாக இருந்தாலும் தங்கள் வீரம் தோற்றதாகவே எண்ணுவர். ஒருநாள் செல்லையா தஞ்சாவூரில் மாநில அளவில் சென்று சேவற்சண்டையில் வெல்கிறார். அப்போது அந்த மனிதனோடு எஸ்.ராவும் சென்றிருக்கிறார்.
செல்லையாவின் சேவல் வெயிலைக் குடித்து வளர்ந்திருந்தது, அதன் கண்கள் எதிராளியை நோக்கும்போது சலனமே இருப்பதில்லை. ஆர்ப்பாட்டத்துடன் அது களத்தைச் சுற்றுவதில்லை; காத்துக் கொண்டேயிருக்கிறது. எதிராளி தன் மீது பாயும் வரை அது சண்டையைத் துவங்குவதேயில்லை. மாறாக, எதிர் சேவல் தன் மீது பாயும் போது, அது சட்டென விலகி, அதன் அடிவயிற்றோடு பொருந்துகிறது. குருதி பீச்சியடிக்கிறது. செம்புழுதி எழுகிறது, சேவல் ஆறு தண்ணி நின்று சண்டையிட்டு ஜெயித்தது. முதல் பரிசாக ஐந்நூற்று ஒரு ரூபாயும் பெரிய வெண்கல அண்டாவும் தந்தார்கள். ஜெயித்த சேவலைப் பெருமிதத்துடன் கொஞ்சிக் கொண்டிருந்த செல்லையாவிடம் பாபநாசம் வாண்டையார்களில் ஒருவர் அதை இருபத்தைந்தாயிரம் விலைக்குக் கேட்டார். இறுமாப்போடு செல்லையா, “அது சேவல் றெக்கைக்குக் கூட காணாது, என் சேவல் விளையாட்டிலே சாகுமே தவிர, ஒரு நாளும் விற்க மாட்டேன்” என்றார்.
சேவல் சண்டையில் வெட்டும் குத்தும் நடக்கிறதென்று சண்டையை போலீஸ் நிறுத்துகிறது. ஆனாலும் சேவல் சண்டை அவர்கள் ரத்தத்தில் கலந்திருப்பது கண்டு கத்தி இன்றி கட்டலாம் என்கின்றனர். அது “வெப்போர்” எனப்படுகிறது. அப்படிக் கத்தியின்றிக்கட்டுவது அலுப்பைத்தருகிறது. சேவல்கட்டு நின்றவுடன் செல்லையாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறிப் போகும் எஸ்.ரா. பின்குறிப்பில் செல்லையா ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்க்கிறார் என்று ஒருவர் சொல்லக் கேட்கிறார். காலம் விருப்பமான யாவற்றையும் அர்த்தமற்றுவிடச் செய்து விடுகிறது என்று எஸ்.ரா. கூறிச் செல்கிறார்.
எங்கள் ஊரில் ராசு என்ற ஒருவர் இருக்கிறார். அவர் சேவல் சண்டைக்காரர். சண்டைக்குத் தயாராகும்போது அவரைக் காண வேண்டும். ஒரு போதும் அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டை அணிய மாட்டார். சட்டையைக் கழட்டி அருகில் இருக்கும் இடத்தில் எறிந்து விட்டு சேவலை முத்தமிடுவது போன்று கைகளால் நீவுவார். மெல்ல தன் மீசையை முறுக்கிக் கொள்வார். எப்போதும் வலது கையின் தோளில்
ஒரு கயிறு கட்டி இருப்பார். அதை மெல்ல இடது கையால் வருடி ஏற்றுவார். கண்கள் கூர்ந்து மெள்ள புன்னகை உதிராமல் உதடெல்லாம் தட்டி நிற்கும். அப்போது நேராக நிற்க மாட்டார். பக்கவாட்டில் தானே சண்டையிடுவதைப் போன்று ஒயிலாக நிற்பார். ஒரு மாவீரனைப் போன்ற கம்பீரத்துடன் சேவலை விடுவார். ஜெயித்தபிறகு தனது சேவலை வலது கையில் பிள்ளையைப் போல் அணைத்தபடியும் வீழ்ந்த சேவலை இடது கையில் தலைகீழாகப் பிடித்தபடியும் முறுக்கிய மீசையுடன் களத்திலிருந்து தனது வீடு வரை வருவார். வீழ்ந்த சேவலையும் யாரிடமும் கொடுக்க மாட்டார். அவர் பின்னால் யாராவது அவர் சட்டையை எடுத்து வருவர். வீடு வந்த பிறகு பலர் வீழ்ந்த சேவலை உண்பார்கள். அதன் பின் அவர் வேறு மனிதர் ஆகிவிடுவார்; ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்.
வாழ்வைக் குத்தும் ஊசி
இதுபோல தன் ஊரில் மாட்டிற்கு லாடம் கட்டும் ஒருவர், ஊரில் மனிதர்களும் மாடுகளும் இல்லாமல் போக, மாநகரில் ரயிலில் ஊசி விற்றுக் கொண்டிருக்கும் தன் ஊர் மனிதனை எஸ்.ரா. காணும் உக்கிரமான காட்சி வருகிறது. அதை கதையாக எழுதி விட்டார். உண்மையில் அதை எதிர்கொள்ளும் தருணம் சாவை விடக் கொடுமையானது இல்லையா?
எதற்காக ஊரை விட்டு ஓடுகிறோம்? பின்னர் எதனோடு யாரோடு வாழப் போகிறோம்?. வாழ்வு இல்லை என்ற பிறகுதானே இந்த மனிதர்கள் ஊரை விட்டுப் போகிறார்கள். வாழ்வின் அவலங்கள் முழுவதையும் இலக்கியம் பதிவு செய்து கொள்ளுமா? பதிவு செய்ய முடியுமா என்ன?
வாழ்வின் காணமுடியாத அவலங்களை எஸ்.ரா எழுதிச் செல்லும் இவைகள்தானே இலக்கியம் செய்யும் பணி.
மண்ணோடு நிற்கும் மனிதன்
தன் காடு கரை எல்லாம் இழந்து மகன்களும் வேரூர் போய்விடப், பிடிவாதமாக ஒற்றை பனைமர நிழலில் அமர்ந்து கொண்டே இருக்கும் மனிதனை என்ன சொல்ல, மண்ணை விட்டுச் சென்று விடக் கூடாது என்று யாவையும் இழந்து மண்ணோடு நிற்கும் அந்த மனிதன். இன்று ஏதேதோ தந்திரங்களால் மக்களை சூழ்ச்சி செய்து மண்ணை முதலாளிகள் பிடுங்குகின்றனர். மக்களும் அதற்கு ஒப்புக் கொடுத்தபடி மண்ணை இழக்க காகிதங்களை மடியில் கட்டியபடி நிற்கின்றனர். மண்ணை இழந்த பிறகு மனித வாழ்க்கை என்பதை எதன் மூலம் சொல்வது?
இருபத்தைந்தாயிரத்தைவிட தனது சேவல் ரெக்கை கூட பெரிது என்ற செல்லையாவும் யாவும் இழந்து மண்ணைப் பார்த்தபடி பனைமரத்தடியில் கிடக்கும் மனிதனும் ஒருவர் தானில்லையா? வெவ்வேறு சூழ்நிலை கொண்ட மனிதர்களும் இழந்து நிற்கும் வாழ்க்கை பயணம் என்பது ஒன்றுதான்.
முடிவு
ஒருவன் தன் வாழ்நாளில் தான் விரும்பியபடி வாழ முடியாதது மானிட வாழ்வின் பெரும் துயரம், அதுவும் தான் நேசித்ததை இழப்பது என்பது சாவை விடக் கொடியது, சாவை விட கொடிய சூழலால் தள்ளப்பட்டு, கொடும் சூழலில் சிக்குண்டு, துயருண்டு தடுமாறி யாவும் இழந்து வாழ்ந்து இறந்துபோகும் வாழ்வில், இதுதானா மானிட வாழ்வு என்று எண்ணும்போது மனம் பதைபதைப்பு கொள்கின்றது.
இப்படியான, வாழ்வில் எண்ண முடியாத நிலைகளைக் கதைகளால் காட்டி போகும் எஸ்.ரா வின் துணையெழுத்து அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாகும் என்பதை அதை வாசிப்பதன் மூலம் அனைவரும் உணரலாம்.
இந்நூலை பெறுவதற்கு கீழே உள்ள இணைப்பை அணுகவும்
செந்தமிழ்த்தேனீயின் 20 தமிழ் கவிதைகள்: https://wideangle.co.in/tamil-kavithai/
எங்களின் மற்ற புத்தக விமர்சனங்களை பார்க்க
https://gkreview.com/book-review/tamil/